சருமத்தில் நிறத் திட்டுக்கள்: அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்
Highlights
- ● சருமத்தில் நிறத் திட்டுக்கள் ஏற்படும்போது பொதுவாக சருமத்தின் நிறம் மாறலாம்; அல்லது அடர்ந்த கருப்பு நிறத் திட்டுகள் முகம் மற்றும் உடலில் தோன்றலாம்.
- ● இது உள்ளார்ந்த (மரபு சார்ந்த) காரணங்களாலும் வெளிப்புறத்திலிருந்து சில காரணங்களாலும் ஏற்படுகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு இப்பிரச்சனை ஏற்படுகிறது. சில ஆண்களுக்கும் ஏற்படுகிறது.
- ● சருமம் எந்த நிறத்தில் இருந்தாலும் இவ்வாறு திட்டுக்கள் தோன்றலாம். பெரும்பாலும் சூரிய ஒளி அதிகமாகப் படுவதன் காரணமாவே இவ்வாறு தோன்றுவதால், இது ஆசியாவில் உள்ள மக்களுக்கும், வெப்ப மண்டல நாடுகளில் வசிப்பவர்களுக்கும் தோன்றும் வாய்ப்பு அதிகம்.
- ● பெரும்பாலும் இது நடுத்தர வயதினருக்கே ஏற்படுகிறது. சில வகையான கருந்திட்டுக்கள் வயதாக ஆக அதிகரிக்கும்.
கருந்திட்டுக்கள் என்றால் என்ன?
நமது சருமம், தலைமுடி, சுவாசப் பாதையில் உள்ள சவ்வுப் படலம், கண்களின் விழித்திரை போன்றவை மெலனின் என்ற பொருள் ஆங்காங்கே சேர்ந்து கொள்வதால், இயற்கையான நிறத்தைப் பெறுகின்றன. இந்த மெலனினை, மெலனோசைட்கள் என்னும் தனிப்பட்ட செல்கள் சுரக்கின்றன. இந்த மெலனின் அதிகமாக சுரக்கும் போது (ஹைப்பர் பிக்மெண்டேஷன்) கருந்திட்டுக்கள், ஆங்காங்கே தனித்தனி திட்டுக்கள் அல்லது சருமம் நிறமிழத்தல் போன்றவை ஏற்படலாம். இது நமது சருமத்தின் நிறத்தை பாதித்து, சீரற்றதாக மாற்றுகிறது.
ஹைப்பர்பிக்மெண்டேஷன் அல்லது அதிகமாக மெலனின் சுரக்கும் போது நமது சருமத்தில் சில சில இடங்கள் மட்டும் கூடுதலாகக் கருப்பாக இருக்கும். இந்தப் பகுதிகளின் அளவு, பரப்பு மாறுபடலாம். நம் உடலில் இவை தோன்றும் இடங்களும் மாறுபடலாம். எனவே ஒரு தோல் மருத்துவரால்தான் நமது உடலில் கருந்திட்டுக்கள் ஏற்படுவதற்கான சரியான காரணங்களைக் கண்டறிய முடியும்.
சருமத்தில் கருந்திட்டுக்கள் ஏற்படக் காரணங்கள்?
சில உள்ளார்ந்த அல்லது வெளியில் உள்ள காரணங்களால் மெலனின் அதிகமாக சுரக்கும் போது இவ்வாறு சருமத்தில் ஆங்காங்கே திட்டுக்கள் தோன்றும்.
- சூரிய ஒளி படுதல் – சூரிய ஒளி நமது உடலில் அதிகமாகப் படும்போது குறிப்பாக UVA கதிர்கள் அதிகமாகப் படும்போது, நமது சருமத்தை ஆழமாக அவை ஊடுருவிச் செல்கின்றன. அதனால் கூடுதலாக மெலனின் சுரக்கிறது.
● காயங்கள் – நமது சருமத்தில் ஒரு வெட்டுக் காயம், பிற காயங்கள், பருக்கள் ஏற்படுதல், சருமத்தில் முடியை சரியான முறையில் எடுக்காமல் இருத்தல், முடியை நீக்குவதற்கான கிரீம்கள் போன்ற பல விஷயங்கள் கொஞ்சம் வீக்கத்தைத் தூண்டலாம். அப்போது கூடுதலாக மெலனின் சுரக்கும்.
● மருந்துகள் – சில மருந்துகளின் பக்கவிளைவுகள் காரணமாகவும் திட்டுக்கள் உருவாகலாம். உதாரணமாக கீமோதெரபி, டெட்ராசைக்ளின் ஆன்டிபயாடிக்ஸ் போன்றவை காரணமாக இப்படி ஏற்படலாம்.
● ஒவ்வாமை – சில அழகு சாதனங்கள், தலைமுடிக்கான சாயம், போன்றவை நேரடியாக நமது சருமத்தில் படுவதனால் ஒவ்வாமை ஏற்பட்டு திட்டுக்கள் ஏற்படலாம்.
உள்ளார்ந்த காரணிகள்
- ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வு – நமது உடலில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜஸ்ட்டிரான் போன்ற ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதால் சில சமயம் கருந்திட்டுக்கள் ஏற்படலாம். இவற்றை மங்கு (Melasma) என்று சொல்லுவோம். இவை சில சமயம் கருத்தரித்தல் அல்லது கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றால் அதிகரிக்கலாம்.
- மரபுவழி / பரம்பரைக் காரணங்கள் – சருமத்தில் கருந்திட்டுக்கள் ஏற்பட மரபு வழிக் காரணங்களும் இருக்கலாம். உதாரணமாக மரபு வழியில் ஏற்படக்கூடிய மல்டி சிஸ்டமிக் சிண்ட்ரோம்களின் காரணமாக லென்டிஜின்ஸ் எனும் ஒரு வகையான திட்டு ஏற்படலாம்.
- வியாதிகள் – சில வியாதிகளின் காரணமாகவும் கருந்திட்டுக்கள் ஏற்படலாம். உதாரணமாக அடிசன்ஸ் நோய், எண்டோக்ரைன் நோய்களினால் உடலில் ஹார்மோன்களின் அளவு பாதிக்கப்பட்டு, மெலனின் அதிகமாக சுரக்கலாம்.
கருந்திட்டுக்களின் அறிகுறிகள்
நமது சருமத்தில் சில இடங்கள் வெளிறிப் போகலாம் அல்லது அடர்ந்த கருப்பு அல்லது பிரெளன் நிறத்தில் திட்டுக்கள் தோன்றலாம். இந்த இடங்களில் சூரிய ஒளி நேரடியாகப் படும்போது மேலும் அடர்ந்த நிறமாக மாறலாம்.
பொதுவாக கருந்திட்டுக்களைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம் –
- கரும் புள்ளிகள் (ஃப்ரெக்கிள்ஸ்) – தொடர்ந்து அடிக்கடி நம்மீது சூரிய ஒளி பட்டால் நமது சருமத்தில் இத்தகைய திட்டுக்கள் ஏற்படலாம். பெரும்பாலோருக்கு இவ்வகைத் திட்டுக்கள்தான் இருக்கும். சூரிய ஒளி நேரடியாகப் படும் முகம் போன்ற இடங்களில் இவை சிறிய வட்டப் புள்ளிகளாகத் தோன்றும். வழக்கமாக இது சற்றே சிவப்பு நிறம் உடையவர்களுக்கே வரும். மரபுவழிக் காரணங்களாலும் இவை வரலாம்.
- வீக்கத்திற்குப் பிறகு ஏற்படும் திட்டுக்கள் – நமது உடலில் சில சமயங்களில் காயங்கள், தீக்காயங்கள், சிராய்ப்புகள் ஏற்படும்போதும், இரசாயனப் பொருட்களால் சிகிச்சை அளிக்கும் போது ஏற்படும் விளைவுகள் போன்றவற்றாலும், அடர் திட்டுக்கள் ஏற்படலாம். சில சமயங்களில் பருக்கள் வெடித்து அதன் பிறகு அந்த இடம் சிவப்பாகவோ, பிரெளனாகவோ கருப்பாகவோ மாறலாம்.
- மங்கு (melasma) – இவை சருமத்தின் ஆழத்தில் சென்று தாக்கக்கூடிய திட்டுக்களாக இருக்கும். இவை பெரும்பாலும் பெண்களுக்கே ஏற்படுகிறது. கன்னம், மூக்கு, தாடைப் பகுதிகளில் சீரற்ற வடிவத்தில் பிரெளன் அல்லது கிரே வண்ணத் திட்டுக்களாகத் தோன்றும்.
- சூரிய ஒளியால் ஏற்படும் புள்ளிகள் – Solar Lentigines என்று குறிப்பிடப்படும் இவை குறிப்பிட்ட, வரையறுக்கப்பட்ட வடிவங்களில் இருக்கும். தொடர்ந்து சூரிய ஒளி படுவதால்தான், இவை ஏற்படுகின்றன. எந்த அளவு UV கதிர்களால் மெலனின் தாக்கப்படுகிறதோ அதற்கேற்ப கருந்திட்டுக்கள் உருவாகின்றன.
கண்டறிதல்
கருந்திட்டுக்களின் வகையை நன்கு பரிசோதித்து அதற்கேற்ப துல்லியமாக அதற்குரிய சிகிச்சையை ஒரு அனுபவம் மிக்க தோல் மருத்துவரால் மட்டுமே அளிக்க முடியும். முதலில் மருத்துவர் நேரடியாக அந்தத் திட்டுக்களைப் பரிசோதிப்பார். பின்பு டெர்மாஸ்கேன், அல்லது பயாப்ஸி போன்றவை எடுக்கப்படலாம். உங்களது மருத்துவப் பின்னணி, உங்கள் குடும்பத்தின் மருத்துவப் பின்னணி போன்றவற்றையும் மருத்துவர் கேட்டறிவார். பிறகு மேலும் சருமத்தை நன்கு பரிசோதித்து கருந்திட்டுக்கள் ஏற்படுவதற்கான சரியான காரணங்களைக் கண்டறிவார்.
நன்கு சருமத்தைப் பரிசோதித்த பின்பு, தோல் மருத்துவர் அங்கு தடவுவதற்கான மருந்தோ அல்லது மேம்பட்ட சிகிச்சைகளையோ பரிந்துரைப்பார்.
உங்களுக்கு இந்த ஆபத்து ஏற்படலாமா?
நமது சருமம் எந்த வகையான சருமமாக இருந்தாலும், நாம் வசிக்கும் இடம் எதுவாக இருந்தாலும், எந்த வயதினராக இருந்தாலும் ஆண், பெண் எந்த பாலினத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நமக்கு கருந்திட்டுக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஆசியாவில் உள்ளவர்களிடையே இதற்கு வாய்ப்பு அதிகம். பல சமயங்களில் இது சூரிய ஒளியின் நேரடித் தாக்குதலினாலேயே ஏற்படுகிறது. ஒரே ஒரு நாள் தொடர்ந்து சூரிய ஒளி நமது சருமத்தில் பட்டாலே கருந்திட்டுக்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பரம்பரையாக கருந்திட்டுக்கள் முன்னோர்களுக்கு இருந்தாலும், உங்களுக்கு வரும் வாய்ப்பு அதிகம். எனவே சரியான நேரத்தில் காரணத்தைக் கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சையை அளித்தால் கண்டிப்பாக இதை குணப்படுத்த முடியும்.
இது வராமல் தடுத்தல் மற்றும் வந்தால் எதிர்கொள்ளுதல்
- எப்போதும், பலருக்கும் பொருந்தக்கூடிய broad-spectrum சன்ஸ்கிரீன் லோஷனை (அதிக அளவு SPF கொண்டது) உபயோகிக்கவும். இவை சூரியனின் UVA, UVB கதிர்களிலிருந்து காப்பாற்றும்.
- தினசரி தவறாமல் சருமப் பராமரிப்பிற்கு நேரம் ஒதுக்கவும். சுற்றுச் சூழலினாலும், மாசுகளினாலும், தூசினாலும் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கலாம்.
- உச்சி வெயிலில் வெளியே போகும்போது தலைக்கு தொப்பி அல்லது ஸ்கார்ஃப் போன்றவை அணியவும்.
வீட்டிலேயே செய்யக்கூடிய வைத்தியங்கள்
வீட்டிலேயே செய்யக்கூடிய கை வைத்தியங்களை நாங்கள் பரிந்துரைப்பதில்லை. ஏனெனில் இவற்றுக்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை. மேலும் சில சமயங்களில் சருமத்தில் எரிச்சல்/அரிப்பு ஏற்படலாம். அதனால் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது குணமாக அதிக காலம் தேவைப்படலாம். சரியான மருத்துவர்களின் உதவி பெறுதலின் மூலமே தகுந்த சிகிச்சைகள் அளித்து நல்ல பலன்களைப் பெற முடியும்.
சிகிச்சை முறைகள்
- பாதிக்கப்பட்ட இடத்தில் தடவும் மருந்துகள்
- இரசாயன பீல்கள்
- லேசர் சிகிச்சை Q-switched NdYAG லேசர்களுடன்
நோயைப் பற்றிய கணிப்பு
கருந்திட்டுக்கள் ஏற்படுதல் ஒரு தீவிரமான வியாதி அல்ல. ஆனால் சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால் இது தீவிரமடையலாம். அடர்ந்த புள்ளிகள், பருக்களால் உண்டாகும் வடுக்கள், சூரிய ஒளியால் ஏற்படும் புள்ளிகள் போன்றவை அங்கங்கே தடவப்படும் கிரீம்கள் போன்றவற்றால் குணமடையலாம். ஆனால் மிகுந்த அடர் நிறத் திட்டுக்களைச் சரிசெய்ய மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் (லேசர் சிகிச்சை போன்றவை) தேவைப்படலாம். ஒரு தோல் மருத்துவர் சரியானபடி இந்த திட்டுக்களை பரிசோதித்து அதற்குரிய, உங்களுக்குப் பொருந்தக்கூடிய சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.