How Does Fractional Laser Skin Resurfacing Work?
நமது உடலிலேயே நமது சருமம்தான் மிக அதிக அளவில் வெளியே தெரிகின்ற உறுப்பு என்று கூறலாம். எனவே அதை மாசு மருவில்லாமல் பளபளவென்று வைத்துக்கொள்ளப் பலர் ஆசைப்படுவதும், முயற்சிகள் எடுப்பதும் நியாயமானதுதான். சில ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது புதிய புதிய சிகிச்சை முறைகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் பல ஆண்டுகளாக இந்த ஃப்ராக்ஷனல் லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் சிகிச்சை முறை தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. காலத்தை வென்று நிற்கிறது. மாசு மருவில்லாத சருமத்தைத் தருகிறது.
ஃப்ராக்ஷனல் லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் என்பது என்ன?
ஃப்ராக்ஷல் லேசர் ரீசர்ஃபேசிங் என்பது நமது சருமத்தின் மேலாக உள்ள படலத்தை (layer) மட்டும் மிகவும் கவனமாக தகுந்த கட்டுப்பாடுடன் நீக்கி, கீழிருந்து புத்துணர்வு பெற்ற, ஆரோக்கியமான சருமத்தை வெளிக் கொண்டு வரும் ஒரு சிகிச்சையாகும். இந்த சிகிச்சையை அளிக்கும்போது மிகக் கவனத்துடன் சருமத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டும், அடர்த்தி மிகுந்த அதிர்வுள்ள ஒளிக்கற்றைகளை மருத்துவர்கள் செலுத்துகின்றனர். இவை மிக மிகத் துல்லியமாகச் செலுத்தப்படுகின்றன. அப்போது பாதிக்கப்பட்ட படலம் மட்டும் நீக்கப்பட்டு உள்ளிருந்து ஆரோக்கியமான மேம்பட்ட சருமம் வெளிப்படுகிறது.
- ஃப்ராக்ஷனல் லேசர் ரீசர்ஃபேசிங் சிகிச்சை முறை மூலம் வடுக்கள், தடங்கள், சருமப் பிரச்சனைகள் போன்ற அனைத்தையும் நீக்க முடியும். புதிய கொலாஜனை சுரக்க வைப்பதன் மூலம் இதை செயல்படுத்த முடியும். வயதாவதால் ஏற்படும் சருமப் பிரச்சனைகள், அதிக சூரிய ஒளியினால் ஏற்படும் கருமை, சீரற்ற சருமம் சருமத்தில் விழும் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் ஆகிய அனைத்தையும் குணப்படுத்த முடியும்.
- பருக்களின் வடுக்களை நீக்க செய்யப்படும் லேசர் ரீசர்ஃபேசிங் சிகிச்சையினால், பாதிக்கப்பட்ட இடத்தில் மிகக் கவனமாக, பாதுகாப்பாக, கட்டுப்பாடுடன் வெப்ப மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. அப்போது கொலாஜன் மேலும் சுரக்கிறது. அதனால் வடுக்களின் ஆழம் குறைக்கப்பட்டு சருமம் மேம்படுத்தப்படுகிறது. மிகக் கடுமையான, விடாப்பிடியான வடுக்களைக் கூட இதனால் நீக்கி, சருமத்தை மீண்டும் சீராகவும் வழவழப்பாகவும் ஆக முடியும்.
லேசர் ஸ்கின் டைட்டனிக் சிகிச்சை எனப்படும் சருமத்தை இறுகச் செய்யும் லேசர் சிகிச்சை முறை செய்யப்படும்போது, பாதிக்கப்பட்ட திசுக்கள் மிகக் கவனமாக, கட்டுப்பாடுடன் அழிக்கப்படுகின்றன. அப்போது உடனடியாக சருமம் சுருங்கி, கொலாஜன் மீண்டும் சீராகப் பரவுகிறது. மேலும் ஆரோக்கியமான கொலாஜன் உற்பத்தியும் தூண்டப்படுவதால், சருமம் நன்கு இறுகுகிறது. இதனால், வயதாவதினால் ஏற்படும் வடுக்கள், புகைப் பிடிப்பதால் ஏற்படும் கோடுகள், முகத்தை சுருக்குவதால் ஏற்படும் கோடுகள், காக்கைக் கால் கோடுகள், சுருக்கங்கள் போன்ற அனைத்தும் குணமாக்கப்படும். சருமத்தின் இயல்பை, தன்மையை மேம்படுத்தி, தொங்கும் சருமத்தை சீராக்கவும் இது மிகச் சிறந்த, அறுவை சிகிச்சையற்ற ஒரு சிகிச்சை முறையாகும்.
லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் சிகிச்சையால் கிடைக்கும் பலன்கள்
இந்த ஃப்ராக்ஷனல் லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் சிகிச்சையால் கிடைக்கும் 7 முக்கிய பலன்கள் இதோ:
- பாதுகாப்பான, மிகச் சிறந்த சிகிச்சை.
- பலன்களுக்காக சிறிது காலம் காத்திருந்தால் போதும்.
- அறுவை சிகிச்சை தேவையற்ற சிகிச்சை முறை.
- விரைவாக செய்துவிடக் கூடியது.
- நீண்ட நாள் பலன் அளிக்கக்கூடியது.
- அனைத்து விதமான சருமங்களுக்கும் ஏற்றது.
- பெரிய, குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள் இல்லை.
உடலின் எந்தெந்தப் பகுதிகளுக்கு இந்த லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் முறையைப் பயன்படுத்தலாம்?
இந்த சிகிச்சை முறையைக் கீழ்க்கண்ட பகுதிகளில் பயன்படுத்தலாம்:
- முகம் – பருக்களினால் ஏற்படும் வடுக்கள், அம்மை வடு, விபத்துக்களினால் ஏற்படும் வடுக்கள், தீக்காய வடுக்கள், அறுவை சிகிச்சை வடுக்கள் ஆகியவற்றை நீக்க இச் சிகிச்சையைப் பயன்படுத்தலாம்.
- கழுத்து, கைகள், மார்பு – பருக்கள், அம்மை, வயதாவதினால் வரும் புள்ளிகள், சூரிய ஒளி அதிகம் படுவதால் சீரற்ற சருமம் போன்றவற்றினால் ஏற்படும் வடுக்களை நீக்க இச்சிகிச்சையைப் பின்பற்றலாம்.
லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் லேசர்கள்
தோல் மருத்துவர்கள் பலவிதமான லேசர்களைப் பயன்படுத்தி இந்த லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் சிகிச்சையை செய்கிறார்கள்:
- அப்லேடிவ் லேசர்கள் – லேசர் கதிர்களிலிருந்து வெளிப்படும் வெப்பம் சருமத்தின் மேல் படலத்தை மட்டும் வெகு கவனமாக, (மிக நுண்ணிய காயங்களை மட்டும் ஏற்படுத்தி) நீக்குகிறது. பழைய கொலாஜனை தகர்த்து, புதிய ஆரோக்கியமான கொலாஜன் சுரக்க வழி செய்கிறது. அப்போது புதிய ஆரோக்கியமான கச்சிதமான நன்கு சீரான இழைகளுடன் கூடியது போன்ற சருமம் வெளிப்படுகிறது. இந்த சிகிச்சையின் போது தோலின் மேல் பகுதி மட்டும் மிக மிக லேசாக சூடுபடுத்தப்படுகிறது. அதனால் முகத்தின் மிக நுண்ணிய பகுதிகளுக்கும் பயன்படுத்தலாம். இதனால் நல்ல வழவழப்பான இறுக்கமான சருமம் வெளிப்பட்டு, வடுக்கள் மறைந்து விடும். இந்த சிகிச்சை முடிந்ததும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைக் கவனமாகப் பின்பற்றாமல் விட்டு விட்டால் பலன்கள் தெரிய நீண்ட நாட்கள் ஆகலாம், சிகிச்சையினால் வடுக்கள் ஏற்படும் ஆபத்தும் ஏற்படலாம், தொற்று மற்றும் திட்டுக்கள் ஏற்படலாம். எனவே மிகக் கவனமாக இருக்க வேண்டும். இந்த அப்லேடிவ் சிகிச்சையில் CO2 லேசர் மற்றும் எர்பியம் லேசர் சிகிச்சைகள் அடங்கும்.
- அப்லேடிவ் இல்லாத லேசர்கள் – அப்லேடிவ் சிகிச்சை போல இதில் சருமத்தை சுரண்ட / கீற வேண்டிய அவசியமில்லை. எனவே காயங்கள் ஏற்படுவதில்லை. சருமத்தின் மேல் பகுதியில் மட்டும் இது மிக நாசூக்காக வேலை செய்கிறது. நன்கு கட்டுப்படுத்தப்பட்டு தேவையான அளவு மட்டுமே செலுத்தப்படும். வெப்பம் பாதிக்கப்பட்ட திசுவை மட்டுமே தாக்குகிறது. அதனால் கொலாஜன் சுரப்பது அதிகமாகிறது. இவ்வாறு புது கொலாஜன் சுரப்பதால் தேவையற்ற வடுக்கள் மறையத் தொடங்குகின்றன. அதனால் சருமம் நன்கு இறுகி, புத்துணர்வு பெறுகிறது. இந்த வகை சிகிச்சையில் வலியிருக்காது. விரைவில் பலன் பெறலாம். அடர்ந்த நிறமுடைய சருமத்திற்கு மேலும் பாதுகாப்பானது. லேசான மற்றும் மிதமான வடுக்களை நீக்கவும், வீக்கத்திற்கு பிறகு ஏற்படும் அடர்ந்த திட்டுக்களை நீக்கவும். மாசு மருவற்ற சருமத்தைப் தரவும் இந்த சிகிச்சை வழங்கப்படுகிறது.
- பிக்ஸெல் ஃப்ராக்ஷனல் ரீசர்ஃபேசிங் – ஃப்ராக்ஷனல் லேசர் ரீசர்ஃபேசிங் சிகிச்சைதான், வடுக்களை மிகத் துல்லியமாக நீக்க, பெரிதும் விரும்பப்படுகிறது. இதில் லேசரின் சக்தி மிக மிக நுண்ணிய கதிர்களாகப் பிரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதி மிகவும் கவனத்துடன் குறிப்பாகத் தாக்கப்படுகிறது. அப்லேடிவ் லேசர்கள் பயன்படுத்தும்போது சருமத்தின் மேல்பகுதி (படலம்) மிகக் கவனமாக ஆவியாக்கப்படுகிறது. ஆனால் இந்த முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மட்டும் குறி வைக்கப்பட்டு, சமமான இடைவெளியில் உள்ள மிக மிக நுண்ணிய துளைகள் அங்கே போடப்படுகிறது. நடுவில் ஆரோக்கியமான சருமம் அப்படியே தங்குகிறது. இந்த முறையில் விரைவில் காயங்கள் குணமாகி, பலன்களும் விரைவில் தெரிய ஆரம்பிக்கின்றன. சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பும் குறைவுதான். இது அனைத்து விதமான சருமங்களுக்கும் பொருந்தக்கூடியது. மிக நீண்ட நாட்களாக உள்ள திட்டுகள், வடுக்கள், வயதாவதனால் ஏற்படும் சருமப் பிரச்சனைகள், பெரிதாக்கப்பட்ட துளைகள் ஆகியவற்றுக்கு இச்சிகிச்சை மிகவும் பொருத்தமானது.
இந்த சிகிச்சை எவர்க்கெல்லாம் பொருத்தமானது?
லேசர் ரீசர்ஃபேசிங் அனைத்து விதமான சருமங்களுக்கும் பொருந்தக்கூடியது. மேற்கூறிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே இதை தைரியமாக எடுத்துக் கொள்ளலாம், ஆயினும் கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் இது பொருந்தாது. சில குறிப்பிட்ட மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், ஹைப்பர்டிராபிக் வடுக்கள், கெலாய்ட்ஸ் போன்றவை ஏற்படக் கூடியவர்களுக்கும் இது பொருந்தாது.
லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது?
ஸ்கின் ரீசர்ஃபேசிங் சிகிச்சையைப் பொருத்தமட்டில் அனைவருக்கும் பொருத்தமான “ஒரே வழி” என்பது போன்ற முறையைப் பின்பற்றுவதில்லை. உங்களது சருமத்தின் வகை, வடுக்களின் தீவிரம், எத்தனை காலம் காத்திருக்கலாம், உங்கள் மருத்துவர் பின்னணி, உடல் நலம் போன்றவற்றைப் பொருத்து மருத்துவர் இதைப் பரிந்துரைப்பார்.
இந்த சிகிச்சையின் போது கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.
- தோல் மருத்துவர் உங்கள் சருமத்தை நன்கு பரிசோதிப்பார். பிறகு உங்கள் சருமப் பிரச்சினைகளின் தீவிரத்தை ஆராய்ந்து அதற்கேற்ப ஒரு தனிப்பட்ட சிகிச்சைத் திட்டத்தை (லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் உட்பட) சிபாரிசு செய்வார், அல்லது லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் சிகிச்சையை மட்டும் சிபாரிசு செய்யலாம்.
- இந்த சிகிச்சைக்கு முன்பு நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளை மருத்துவர் உங்களிடம் கூறுவார். அவற்றை பின்பற்றினால் விரைவில் காயங்கள் ஆறும், பக்க விளைவுகள் ஏற்படக்கூடிய ஆபத்துக்களும் குறையும். சிகிச்சை தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பாகவே இந்த நடவடிக்கைகளை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- சிகிச்சை செய்யப்படும் தினத்தில் மருத்துவர் உங்கள் சருமத்தை நன்கு சுத்தம் செய்வார். அதில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பு, தூசி, மேக்கப் போன்றவற்றை முற்றிலும் நீக்குவார்.
- பிறகு சிகிச்சை செய்யப்பட வேண்டிய இடத்திற்கு மட்டும் மரத்துப் போவதற்கான ஒரு கிரீமைத் தடவுவார். அப்போதுதான் சிகிச்சையின்போது வலி இருக்காது. வசதியாகவும் உணர்வீர்கள்.
- மருத்துவர், சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பாக ஒரு சிறு பகுதியில் மட்டும் லேசர் கதிர்களைச் செலுத்தி, பரிசோதித்துப் பார்ப்பார்.
- பின்பு லேசர் கதிர்களின் வேகம், எத்தனை முறை செலுத்த வேண்டும் என்பது போன்ற விவரங்களை, உங்கள் சருமத்தின் பிரச்சனைகளுக்கு ஏற்ப நிச்சயிப்பார்.
- சிகிச்சை முடித்த பிறகு, அந்த இடத்தில் ஒரு கிரீம் (soothing cream) மற்றும் சன்ஸ்கீரின் லோஷன் போன்றவற்றைத் தடவுவார்.
- இதனால் பெறக்கூடிய பலன்களை நீண்ட நாள் தொடர்ந்து பெறுவதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை பற்றி மருத்துவர் விளக்கமாகக் கூறுவார்.
#உங்கள் வடுக்களின் வகை, வடு உள்ள இடம், அதன் வடிவம், உருவான விதம் போன்ற பலவற்றைப் பொருத்து வடுக்களுக்கான சிகிச்சை அமையும்.
இந்த வீடியோவைப் பார்த்து மேலும் விவரங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் லேசர் ரீசர்ஃபேசிங் சிகிச்சைக்கு ஆகக்கூடிய செலவு
பருக்களினால் ஏற்படும் வடுக்களை நீக்குவதற்காக செய்யப்படும் லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் சிகிச்சைக்கு இந்தியாவில், ரூ.7,000 முதல் ரூ.20,000 வரை ஒரு அமர்வுக்கு (session) செலவாகும். இது வடுவின் தீவிரம், எத்தனை முறை செய்ய வேண்டும், எந்த வகையான லேசர் பயன்படுத்தப்பட வேண்டும், மருத்துவரின் அனுபவம், கிளினிக் எந்த அளவுக்கு புகழ் பெற்றது, கிளினிக் அமைந்துள்ள இடம் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும்.
குறிப்பு – மேலே குறிப்பிடப்பட்டுள்ள கட்டணம்/செலவு ஒரு கிளினிக்கிற்கும் மற்றொரு கிளினிக்கிற்கும் வேறுபடும். இந்தியாவின் பெரு நகரங்களில் – டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் உள்ள சராசரிக் கட்டணமே குறிப்பிடப்பட்டுள்ளது.
சிகிச்சைக்கு முன்பும் பின்பும்
கீழே உள்ள படங்களில் லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் சிகிச்சைக்கு முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட படங்களைப் பார்த்து எந்த அளவு இச்சிகிச்சை பலனளிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா?
மிகவும் மேம்படுத்தப்பட்ட இந்த அழகியல் சார்ந்த சிகிச்சைக்கான பக்க விளைவுகளைப் பற்றியும் தெரிந்து கொண்டு அதற்குப் பிறகு முடிவெடுப்பது சிறந்தது:
- லேசர் ரீசர்ஃபேசிங் சிகிச்சையின் பலன்களைப் பெற சிறிது காலம் காத்திருக்க வேண்டும். சிகிச்சைக்குப் பிறகு லேசாக அந்த இடம் சிவந்து போகுதல், வீக்கம், கொஞ்சம் வெடிப்பு ஏற்படுதல் போன்றவை மிகச் சில காலம் (2 – 5 நாட்கள்) வரை இருக்கலாம்.
- ஆழமான லேசர் சிகிச்சைக்கு பிறகு முகம் சற்று மெலிந்தது போல் தெரியலாம். ஆனால் இதுவும் மிகச் சில நாட்கள்தான் இருக்கும்.
- சிகிச்சைக்குப் பிறகு மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றி நடக்கவில்லையெனில், கொஞ்சம் அடர்ந்த நிறம் உடையவர்களுக்கு, நிறம் மங்குதல், கருந்திட்டுக்கள் போன்றவை ஏற்படலாம்.
- பருக்களால் ஏற்படும் வடுக்களுக்கு இந்த சிகிச்சையை செய்யும்போது, அப்போது இருக்கும் பருக்களால் சற்று தொல்லை ஏற்படும்.
நிபுணர்களின் அறிவுரை
லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் சிகிச்சையின்போது கீழ்க்கண்ட விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்:
- நல்ல தகுதியும் அனுபவமும் பெற்ற மருத்துவர்களும், சான்றிதழ் பெற்ற தெரபிஸ்ட்களும் இருக்கும். நம்பிக்கைக்குரிய கிளினிக்குகளுக்கு செல்வது அவசியம். அந்த கிளினிக்குகளில் தகுந்த செயல்முறைகள் (protocols) பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இந்த விவரங்களை கவனிக்காமல் அலாட்சியமாக இருந்துவிட்டால் உங்களுடைய சருமத்திற்கு மிகக் கடுமையான, சரிசெய்ய முடியாத பாதிப்புகள் ஏற்படலாம்.
- அந்த கிளினிக்கில் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறார்களா என்பதை உறுதி செய்துகொள்ளவும். அப்போதுதான் பாதுகாப்பையும் சரியான செயல்முறை பின்பற்றப்படுகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள முடியும்.
- இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உங்கள் மருத்துவப் பின்னணி, உடல்நிலை ஆகியவற்றைப் பற்றி மருத்துவரிடம் விவரமாக கலந்தாலோசிக்கவும். அப்போதுதான் சரியான சிகிச்சையைத் தேர்ந்தெடுக்க முடியும்.
- எத்தனை முறை இந்த சிகிச்சையை செய்து கொள்ள வேண்டும், அதற்காகக் கூடிய செலவு, பக்க விளைவுகள் (ஏதேனும் இருந்தால்) ஆகியவற்றை நன்கு தெரிந்து கொண்டு பின்பு முக்கியமான முடிவுகளை எடுக்கவும்.
- இந்த சிகிச்சைக்கு முன்னும் பின்னும் மருத்துவர் கூறியுள்ள அறிவுரைகளைத் தவறாது பின்பற்றவும், அப்போதுதான் சிக்கல்கள் ஏற்படாமல், பக்க விளைவுகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
- சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு, உங்கள் உடலின் ஒரு சிறு பகுதியில் இதை செய்து பார்ப்பார். அதற்கேற்ப சிகிச்சைக்கான சரியான அளவுகளை நிர்ணயிப்பார்.
- மிகச் சிறந்த பலன்களைப் பெற, இந்த சிகிச்சையுடன், நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சில மருந்துகளையும் உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் அனைத்துமே உங்களுக்கு உதவியாகவும் பல விஷயங்களைப் புரியவைக்கும் விதத்திலும் இருக்கும் என்று நம்புகிறோம்.
உங்கள் வடுக்களை நீக்குவதற்கோ, அல்லது சருமம் தொங்கிப் போவதை சரி செய்யவோ தோல் மருத்துவரைப் பார்க்கப் போவதாக இருந்தால், புகழ்பெற்ற கிளினிக்கிற்கு சென்று, லேசர் ஸ்கின் ரீசர்ஃபேசிங் சிகிச்சை உங்களுக்குப் பொருத்தமானதா என்று அறிந்து கொள்ளுங்கள்.